டாஸ்மாக் ஊழியரை தாக்கிய வழக்கில் தலைமறைவான 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள லக்காபுரம் பகுதியில் ராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் டாஸ்மாக் கடையை அடைத்து விட்டு வரவு செலவு கணக்குகளைப் பார்த்துக் கொண்டிருந்த போது, நான்கு பேர் மது கடைக்கு குடிக்க வந்துள்ளனர். அப்போது மதுக்கடை நேரம் முடிந்துவிட்டதால் மதுபானம் தரமுடியாது என அவர்களிடம் ராஜன் கூறியுள்ளார்.
இதில் கோபம் அடைந்த அவர்கள் ராஜனை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, அவரின் தலை, கை போன்ற இடங்களில் பலமாகத் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து மொடக்குறிச்சி காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த நான்கு பேரையும் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் ஆனைக்கால் பாளையம் செல்லும் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அந்த நான்கு பேர் பதுங்கி இருப்பதை அறிந்த மொடக்குறிச்சி போலீசார் அங்கு விரைந்து சென்று அவர்கள் 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர்.
அந்த விசாரணையில் அவர்கள் அலகாபுரம் நோசிகட்டுவலசு பகுதியில் வசிக்கும் நிதி நிறுவன அதிபரான அன்பரசன், அந்த நிறுவனத்தின் ஊழியரான ஈரோடு ரயில்வே காலனி பகுதியில் வசித்து வரும் பிரவீன்குமார், இரணியன் வீதியில் வசித்துவரும் நந்தகுமார், ஈரோடு கள்ளுக்கடை மேடு பகுதியில் வசித்து வரும் தயாளன் போன்றோரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் நான்கு பேரும் இணைந்து டாஸ்மாக் விற்பனையாளர் தாக்கியதை ஒப்புக்கொண்டனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.