பெட்ரோல் டீசல் விலை உயர்வால் அப்பள தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர்.
கொரோனா ஊரடங்கிற்கு பிறகு அப்பளம் விற்பனை அதிகரித்த நிலையில் தற்போது உற்பத்தி பொருட்களின் விலை உயர்வால் உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்கவில்லை என்றும் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் அப்பள தொழிலாளர்கள் தெரிவித்திருக்கின்றனர். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் வட்டம் சிந்தாமணி அனுப்பானடி, கண்ணன் காலனி ஆகிய பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளிலும், 50க்கும் மேற்பட்ட சிறு தொழில் நிறுவனங்களிலும் முதன்மையாக அப்பளம் தயாராகி வருகிறது.
இந்த நிலையில் பருவமழை மற்றும் டீசல் விலை உயர்வு காரணமாக சரக்கு போக்குவரத்து செலவு உயர்ந்துள்ளது. மேலும் அப்பள உற்பத்திக்கு தேவையான உளுந்து விலையும் உயர்ந்துள்ளது. விலை உயர்வு காரணமாக உற்பத்தி செலவு அதிகரித்து உள்ளது. இதனால் அப்பள தொழிலாளர்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதா கூறியுள்ளனர்.
மேலும் உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கவில்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர். விவசாயிகளுக்கு பயிர்கடன்களை தள்ளுபடி செய்வதைப் போல வங்கியில் நகையை அடமானம் வைத்து வாங்கிய கடனை ரத்து செய்ய வேண்டும் என்றும், தொழிலாளர்களுக்காக விலையை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனர்.