ராமநாதபுரம் அருகே உடல்நிலை சரியில்லாத கல்லூரி மாணவிக்கு பேய் விரட்டுவதாக கூறி சாட்டையால் அடித்தில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் அருகே உள்ள கோரவள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் வீர செல்வம். அவரது மனைவி கவிதா இறந்துவிட்ட நிலையில், மகன் கோபிநாத், தாரணி ஆகியோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் தாரணிக்கு காய்ச்சல் வந்தால் உடல் நலம் பாதிக்கப்பட்டு உள்ளது.ஆனால் தாரணிக்கு சிகிச்சை அளிக்காமல் பேய் பிடித்துள்ளதாக கூறி அவரை திருப்பாலை குடியில் உள்ள கோடங்கியிடம் தந்தை வீர செல்வம் அழைத்துச் சென்று பேய் ஓட்டும் பூஜை செய்துள்ளார்.
எனினும் உடல்நிலை சரியில்லாததால் மற்றொரு பெண் பூசாரியிடம் தாரணியை வீர செல்வம் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு நடைபெற்ற பேய் ஓட்டும் பூஜையின்போது சாட்டை, பிரம்பு ஆகியவற்றால் பெண் பூசாரி தாரணியை தாக்கி உள்ளார். இதில் காயமடைந்த தாரணி மயக்கமடைந்துள்ளார்.இதனையடுத்து உடனடியாக தாரணியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்ததில் டைபாய்டு காய்ச்சல் இருந்தது தெரிய வந்தது.
ஆனால் வீரசெல்வம் மீண்டும் ஒருமுறை பேய் ஓட்டினால் தாராணிக்கு உடல் நிலை சரியாகி விடும் என கூறி வீட்டுக்கு அழைத்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நள்ளிரவு கடுமையான காய்ச்சல் ஏற்பட்ட தாரணியை உச்சிப்புளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றபோது அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மாணவியின் உயிர் இழப்பில் சந்தேகம் உள்ளதாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், உயிரிழந்த தாரணியின் தந்தை, அவரின் சகோதரர், திருப்பாலைக்குடி பூசாரி மற்றும் பெண் மந்திரவாதி ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.உடல்நலம் குன்றிய இளம் பெண்ணுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்காமல் பேய் ஓட்டுவதாக கூறி அவரது உயிரின் தந்தையே பறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.