புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் பணியாற்றிய வட மாநில ஊழியர்களை கடைசி நேரத்தில் பணி நிரந்தரம் செய்து துணை நிலை ஆளுநர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட கிரண்பேடி உத்தரவிட்டிருப்பது சர்ச்சையை எழுப்பியுள்ளது.
புதுச்சேரி துணை நிலை ஆளுநராக கிரண்பேடி பதவி வகித்த போது அரசு துறைகளில் பணியாற்றிய ஊழியர்கள் நற்பெயர் அடிப்படையில் ஆளுநர் மாளிகையில் பணிபுரிந்தனர். இதனால் ஆளுநர் மாளிகையில் அதிக செலவு ஏற்படுவதாகவும், அதிக அளவில் ஊழியர்கள் இருப்பதாகவும் முதலமைச்சர் நாராயணசாமி குற்றம் சாட்டியிருந்தார்.இதனால் பல ஊழியர்கள் அவர்களது துறைக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.
இதனிடையே கடந்த 15ஆம் நாள் வட மாநிலத்தில் சேர்ந்த மூன்று ஊழியர்களை திரும்ப ஆளுநர் மாளிகைக்கு அழைத்ததுடன் அவர்களை பணி நிரந்தரம் செய்து கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார். வட மாநில ஊழியர்களை மட்டும் கிரண்பேடி நிரந்தரம் செய்து அதற்கான ஆணை பிறப்பித்து உள்ளார். அதே நேரத்தில் புதுச்சேரியில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பல மாதங்களாக சம்பளம் இன்றி, பதவி உயர்வும் இன்றி பணியாற்றி வருவதும், போராட்டம் நடத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.