நூதன முறையில் பெண்ணிடம் இருந்து நகைகளை பறித்துச் சென்ற வாலிபரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அண்ணாநகர் தொகுதியில் சகிலா என்பவர் வசித்து வருகிறார். இவர் இரவு நேரத்தில் தனது தோழி ஜெரினா என்பவருடன் தனது வீட்டிற்கு முன்பு நின்று பேசிக்கொண்டிருந்த போது, மோட்டார் சைக்கிளில் இரண்டு வாலிபர்கள் வந்தனர். அவர்கள் முகவரி கேட்பது போல் நடித்து சகிலா கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க சங்கிலியை திடீரென பறித்து விட்டனர். இதனால் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தப்ப முயற்சித்த அந்த இரண்டு நபர்களை பிடிக்க முயற்சித்தபோது, ஒருவரை மட்டும் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே தள்ளி பிடித்துவிட்டனர். அவரை பொதுமக்கள் காவேரிப்பட்டணம் காவல் நிலையத்தில் ஒப்படைத்து விட்டனர்.
மேலும் கீழே விழுந்ததில் அந்த வாலிபருக்கு காயம் ஏற்பட்டதால் காவேரிப்பட்டினம் அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து சகிலா அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த பெண்ணிடம் நகை பறித்தவர் கிருஷ்ணகிரி தர்கா பகுதியில் வசித்து வரும் சதாம் உசேன் மகன் முகமது உசேன் என்பதும், மற்றொருவர் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கந்திலி பகுதியில் வசித்து வரும் சதீஷ்குமார் என்பதும் போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. இதனையடுத்து முகமது உசேனை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து இரண்டு பவுன் சங்கிலியை பறிமுதல் செய்து, தப்பி ஓடிய மற்றொரு குற்றவாளியான சதீஷ்குமாரை வலைவீசி தேடி வருகின்றனர்.