பணக்கார நாடாகத் திகழும் சுவிட்சர்லாந்தில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளோரின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகமே அன்னாந்து பார்க்கும் அளவிற்கு பணக்கார நாடாக திகழும் சுவிட்சர்லாந்தில் கடந்த 2019 ஆம் ஆண்டிற்கான வறுமைக்கோட்டுக்கு கீழே வாழ்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளது. நேற்று வெளியான இந்த புள்ளிவிவரங்களில் 8.7 சதவீதம் பேர் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழ்கிறார்கள் என்று தெரியவந்துள்ளது.
8.5 மில்லியன் மக்கள் வாழும் சுவிட்சர்லாந்தில் 2019 ஆம் ஆண்டு மட்டும் சுமார் 735,000 பேர் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 735,000 பேரில் 155,000 பெயர் வேலை செய்பவர்களாக இருக்கும் போதிலும் வறுமைக்கோட்டுக்கு கீழ் இருப்பது அதிர்ச்சியை அளித்துள்ளது.
நாட்டில் 12 சதவீதத்தினர் தங்களது அன்றாட வாழ்வின் தேவைகளை சந்திப்பதற்கு தடுமாறுகின்றனர். மேலும் 21% பேர் 2500 சுவிஸ் பிராங்குகள் கூட செலவுக்கு இல்லாமல் இருக்கின்றனர்.இந்நிலையில் கொரோனா காலகட்டத்திற்கு பின் தற்போது இவர்களின் நிலைமை என்னவாக இருக்கும் என்பதை யூகிக்க முடிகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.