பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் இரண்டு இடத்தில் கிராம உதவியாளர் சங்கத்தினர் ரத்தத்தால் கையெழுத்திடும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருவாரூர் தாசில்தார் அலுவலகம் முன்பாக வருவாய்துறை கிராம உதவியாளர் சங்கத்தினர் இரத்தத்தால் கையெழுத்திடும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தில் இவர்கள் வலியுறுத்திய கோரிக்கைகளாவது “காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பப்பட வேண்டும், மேலும் கிராம உதவியாளர்களுக்கு அடிப்படை ஊதியமாக மாதம் ரூபாய் 15700 வழங்கப்பட வேண்டும், குறைந்தபட்ச ஓய்வூதியமாக 7750 வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கோஷங்கள் எழுப்பியுள்ளனர். இந்தப் போராட்டத்தில் வட்டத் தலைவர் அப்பாசாமி தலைமை தாங்கி செயலாளர் ஜெய பாபு முன்னிலை வகித்துள்ளார்.
அதேபோல் நன்னிலத்தில் உள்ள தாசில்தார் அலுவலகத்தின் முன்பாக தமிழ்நாடு வருவாய்துறை கிராம உதவியாளர் சங்கம் சார்பில் ரத்தத்தால் கையெழுத்திடும் போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்த போராட்டத்தில் அவர்கள் வலியுறுத்திய கோரிக்கைகளாவது காலமுறை ஊதியம் வழங்கப்பட வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட வேண்டும், மேலும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து கோஷங்கள் எழுப்பியுள்ளனர். இந்தப் போராட்டத்தில் கிராம உதவியாளர் சங்க வட்ட தலைவர் ஹாஜா நஜ்முதீன் தலைமை தாங்கி துணை தலைவர் முருகையன் முன்னிலை வகித்துள்ளார். மேலும் அரசு ஊழியர்கள் பலர் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.