அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நாடு மியான்மர் அரசு தலைவரான ஆங் சான் சூகி மீது சுமத்தப்பட்ட இரண்டாவது குற்றச்சாட்டுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி மியான்மரில் தேர்தல் முறைகேடு தொடர்பாக அரசுத்தலைவர் ஆங் சான் சூகி உட்பட அரசு அதிகாரிகள் மற்றும் முக்கிய அரசு தலைவர்களை ராணுவம் சிறை பிடித்துள்ளது . ராணுவத்தின் அதிரடி நடவடிக்கையால் நாட்டின் மக்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மக்கள் ராணுவ சர்வாதிகாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஆங் சான் சூகியை விடுவிக்கக் கோரியும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
ஆங் சான் சூகி சட்ட விரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட வாக்கிடாக்கிகளை வாங்கி வைத்திருப்பதாக முதலில் குற்றம் சாட்டப்பட்டார். தற்போது இரண்டாவது குற்றச்சாட்டு அவர் மீது செவ்வாய்க்கிழமை பதியப்பட்டுள்ளது. இயற்கை பேரழிவு மேலாண்மை சட்டத்தை மீறியதற்காக இந்த குற்றசாட்டு சுமத்தப்பட்டுள்ளது. எனினும் இந்த இரண்டாவது குற்றச்சாட்டு என்ன என்பது தெளிவாக தெரியவில்லை.
இதனைத்தொடர்ந்து பிரிட்டன் மற்றும் அமெரிக்கா வெளியுறவுத்துறை செயலாளர்கள் ஆங் சான் சூகி மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் மியான்மர் ராணுவம் ,ராணுவ ஆட்சி இனி தொடராது என்றும், பொதுத் தேர்தல் முறையாக நடத்தப்பட்டு வெற்றி பெறுபவரிடம் அதிகாரம் ஒப்படைக்கப்படும் என்று அந்த நாட்டு ராணுவம் கூறியுள்ளது.