ராமர் கோவில் கட்டுமான பணிக்காக 80 வயது மூதாட்டி 51,000 ரூபாய் நன்கொடை அழைத்திருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்காக ஆர்.எஸ்.எஸ் மற்றும் வி.எச்.பி தலைவர்கள் வீடு வீடாக சென்று நிதி திரட்டி வருகின்றனர். அதற்காக குறைந்த தொகையாக பத்து ரூபாயைக் கூட ஏற்றுக்கொள்கிறார்கள். அப்படி வசூல் செய்து வரும் போது கான்பூரில் உள்ள ஒரு வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு வசித்த 80 வயதான கிருஷ்ணா தீட்சித் என்ற மூதாட்டி 51,000 ரூபாய் பணத்தை நன்கொடையாக அளித்தார்.
இந்த பணத்தை அவர் கடந்த 28 ஆண்டுகளாக சேமித்து வைத்து உள்ளார் என்று அவரது குடும்பத்தினர் கூறினர். இதுகுறித்து கிருஷ்ணா தீட்சித் கூறியதாவது, கடந்த 1992ஆம் ஆண்டு முதல் நான் தினமும் இதற்காக ஐந்து ரூபாய் ஒதுக்கி சேமித்து வந்தேன். என் குடும்ப உறுப்பினர்கள் ராமர் கோவில் இயக்கம் தொடக்கபட்டதில் இருந்தே அதில் செயல்பட்டு வருகின்றனர் என்று தெரிவித்தார்.
20,000 ரூபாய்க்கு மேல் ரொக்கமாக வாங்க முடியாது என்பதால் மூதாட்டி அளித்த 51000 ரூபாயை அவரது மகன் வங்கிக் கணக்கில் செலுத்தி பின் அதனை காசோலையாக ஆர்.எஸ்.எஸ் தலைவரிடம் அளித்தனர். இதுமட்டுமின்றி கிருஷ்ணா தீட்சிதின் பேரனும் தனது முதல் மாதம் சம்பளம் உட்பட 1,30,900 ரூபாயை ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்காக நன்கொடை கொடுத்துள்ளார்.