பாலியல் பலாத்காரம் செய்த பெண்ணை திருமணம் செய்து கொள்வேன் என வாலிபர் சமரசத்தில் ஈடுபட்டதால் அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் அவருக்கு முன்ஜாமீன் வழங்கி உள்ளனர்.
பஞ்சாப் மாநிலத்தில் கன்வர் பீர்சின் என்ற வாலிபர் வசித்து வருகிறார். இவர் ஆஸ்திரேலியாவில் வசித்து வரும் தலித் சமூக பெண்ணை காதலித்துள்ளார். இந்த பெண் இந்தியாவிற்கு வரும் போது இருவரும் தனியாக அதிக நேரம் செலவிட்டு உள்ளனர். இந்நிலையில் இந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி அப்பகுதியில் உள்ள சீக்கியர் கோவிலுக்கு அவரை அழைத்து சென்று கன்வர் சத்தியம் செய்து கொடுத்துள்ளார். அதன்பின் அந்த பெண்ணுடன் பாலியல் ரீதியாக பழகி வந்துள்ளார்.
ஆனால் கன்வர் தான் செய்து கொடுத்த சத்தியத்தின் படி நடக்காமல் அந்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்ததோடு, தனது குடும்பத்தினர் தலித் பெண்ணை காதலிப்பதால் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை என்று அந்த பெண்ணிடம் கூறியுள்ளார். இதனால் அமிர்தசரஸ் காவல் நிலையத்தில் அந்த பெண் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் கன்வர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவான அவரை தேடி வந்தனர்.
ஆனால் கன்வர் போலீசாரால் கைது செய்யப் படாமல் இருப்பதற்காக ஹரியானா ஐகோர்ட்டில் முன் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கை சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கானது தலைமை நீதிபதி போப்டே தலைமையிலான பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்துள்ளது. அந்த சமயம் கன்வர் சம்பந்தப்பட்ட பெண்ணை திருமணம் செய்வதற்கு தயாராக உள்ளதாக ஒரு மனுவினை தாக்கல் செய்துள்ளார்.
மேலும் அந்த பெண் ஆஸ்திரேலியாவில் உள்ளதால் அவர் இந்தியாவிற்கு திரும்பி வந்த ஆறு மாதத்திற்குள் அவரைத் திருமணம் செய்து கொள்வேன் என்றும், அதனால் தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் எனவும் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார். அவரது மனுவினை ஏற்று கொண்ட நீதிபதிகள் அவருக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர். மேலும் அவர் அளித்த மனுவின் படி அந்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்து விட்டால் வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்து சிறையில் அடைத்து விடுவோம் என கன்வரை நீதிபதிகள் எச்சரித்துள்ளனர்.