கூலி தொழிலாளியை குத்தி கொலை செய்த 2 பேரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள கொல்லூர் பட்டி தெருவில் சிவலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். அதே பகுதியில் அண்ணாமலை என்கிற மகாலிங்கம் மற்றும் வெள்ளைச்சாமி என்ற கூலி தொழிலாளர்கள் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் தனது வீட்டில் இருந்த சிவலிங்கத்தை அண்ணாமலை வீட்டிற்கு வெளியே கூப்பிட்டுள்ளார். அதன்பின் வெள்ளைச்சாமி ஓடிவந்து தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சிவலிங்கத்தின் தலை, மார்பு பகுதி போன்ற இடங்களில் சரமாரி குத்தி விட்டு இருவரும் அங்கிருந்து தப்பித்து விட்டனர். இதனையடுத்து சிவலிங்கத்தின் அலறல் சத்தம் கேட்டு அவரது மகன் வீட்டை விட்டு வெளியே ஓடிவந்து பார்த்தபோது சிவலிங்கம் மயங்கிய நிலையில் இருந்துள்ளார்.
இதனை தொடர்ந்து உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த சிவலிங்கத்தை அவரது உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்து பார்த்த டாக்டர்கள் சிவலிங்கம் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். அதன்பின் சிவலிங்கத்தின் மனைவி புஷ்பம் என்பவர் நகர காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய அண்ணாமலை மற்றும் வெள்ளைச்சாமி ஆகிய 2 பேரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.