தெருக்கூத்து பார்த்து ரொம்ப நாளாச்சு என்ற சென்னைவாசிகளின் நீண்டநாள் ஏக்கம் நேற்று தீர்ந்தது என சசிகலாவை ராமதாஸ் விமர்சித்துள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்துக் கொண்டிருந்த சசிகலா, தனது 4 ஆண்டுகள் சிறை வாசத்தை முடித்து கடந்த ஜனவரி 27-ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார். அதன் பிறகு உடல் நலக்குறைவு காரணமாக பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ஆனால் கொரோனா பாதிப்பு காரணமாக பெங்களூரில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருந்தார்.
இந்நிலையில் பெங்களூருவில் இருந்து நேற்று சசிகலா தமிழகம் திரும்பினார். அப்போது அவர் வரும் வழியில் பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டன. சசிகலா தமிழக எல்லையில் நுழைந்தவுடன் ஆதரவாளர்கள் பட்டாசுகள் வெடித்து ஆரவாரத்துடன் வரவேற்றனர். பெங்களூருவில் இருந்து சுமார் 23 மணி நேர பயணத்திற்கு பிறகு இளவரசியின் மகள் கிருஷ்ண பிரியாவின் இல்லம் வந்தார் சசிகலா.
அதிகாலை 4 மணிக்கு ராமாபுரம் இல்லத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன்பிறகு 7.20 மணியளவில் சென்னை டி நகர் அபிபுல்லா சாலையில் உள்ள கிருஷ்ண பிரியாவின் இல்லத்திற்கு ஓய்வு எடுக்க வந்தபோது தொண்டர்கள் ஆரத்தி எடுத்து மலர்தூவி மேளதாளத்துடன் வரவேற்றனர். இரவு முழுவதும் தூங்காமல் இருந்த சசிகலா தற்போது ஓய்வு எடுக்கச் சென்றுள்ளார்.
இந்நிலையில் ட்விட்டரில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர் பாமக நிறுவனர் ராமதாஸ். சற்றுமுன் வெளியிட்டுள்ள பதிவில், “தெருக்கூத்து பார்த்து ரொம்ப நாளாச்சு என்ற சென்னை வாசியின் நீண்ட நாள் ஏக்கம் தீர்ந்தது” என அவர் ஒரு பதிவு போட்டுள்ளார். நேற்று சசிகலா ஆதரவாளர்கள் சாலை நெடுகிலும் நின்று அவருக்கு வரவேற்பு கொடுத்ததை தான் ராமதாஸ் இப்படி குறிப்பிட்டுள்ளார் என நெட்டிசன்கள் கூறி வரவேற்கின்றனர்.