அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடந்து வரும் சூப்பர் பவுல் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் இந்திய விவசாயிகள் போராட்டம் குறித்த விளம்பரம் ஒளிபரப்பானது.
மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் கடந்த 70 நாட்களுக்கு மேலாக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தங்கள் கோரிக்கையை முன்வைத்து விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த ஜனவரி 26-ஆம் தேதி மாபெரும் டிராக்டர் பேரணி, கடந்த இரு தினங்களுக்கு முன்னர் சாலை மறியல் போராட்டம் என ஒவ்வொரு போராட்டங்களையும் விவசாயிகள் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். இருந்தாலும் எந்த ஒரு பலனும் இல்லை.
நாடு முழுவதும் உள்ள பல்வேறு தரப்பினரும் விவசாயிகளுக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடந்த வரும் சூப்பர் பவுல் சாம்பியன் ஷிப் கால்பந்து போட்டியில், இந்திய விவசாயிகளின் போராட்டம் குறித்த விளம்பரம் ஒளிபரப்பானது. சுமார் 100 மில்லியன் மக்கள் பார்த்த இந்த போட்டியில், அமெரிக்காவை சேர்ந்த சீக்கிய சமூகத்தினர் 30 வினாடிகள் ஓடும் இந்த வீடியோவுக்கான நிதியை கொடுத்துள்ளனர். மேலும் “வரலாற்றில் இடம்பெற்ற மாபெரும் போராட்டம் இது, நாங்கள் உங்களுடன் நிற்போம்” என அந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.