ஜம்மு -காஷ்மீர் அருகே பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 33 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஜம்மு -காஷ்மீர் மாநிலத்தின் கெஷ்வானில் இருந்து கிஷ்வார் நோக்கி பேருந்து ஓன்று சென்றது. அப்போது கெஷ்வான் – தக்ரை சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து ஸ்ரீக்வாரி என்ற பகுதியில் உள்ள பெரிய பள்ளத்தில் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பேருந்து சுக்கு நூறாக நொறுங்கியது. இந்த விபத்தில் 33 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த விபத்து காலை 8:40 மணியளவில் நிகழ்ந்துள்ளது..
இதையடுத்து சம்பவம் அறிந்த மீட்பு குழுவினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்தில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு கிஷ்வாரில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.பேருந்தில் அளவுக்கு அதிகமானோர் பயணம் செய்ததே விபத்துக்கு காரணம் என்று விபத்தை நேரில் பார்த்த அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.