கள்ளக்காதலை கண்டித்ததால் மனைவி கணவனை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டத்தில் உள்ள இடையன்குளத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் தேதி ஆண் பிணம் ஒன்று எரிந்த நிலையில் கிடந்துள்ளது. இது குறித்து உத்தமபாளையம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்துள்ளனர். இந்த பிணம் முற்றிலும் எரிந்த நிலையில் இருந்ததால் அதன் அடையாளம் காண முடியவில்லை. எனவே பிணத்தில் உள்ள எலும்புகளை எடுத்து டிஎன்ஏ பரிசோதனைக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த பரிசோதனையில் கிடைத்த முடிவுகளின்படி அவர் தேனி மாவட்டத்தில் உள்ள போயன்மார் தெருவை சேர்ந்த நாகராஜ் என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து இறந்தவரின் மனைவியான முத்துமாரியிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது முத்துமாரி தனது கணவரான நாகராஜ் வேலைக்கு சென்றுவிட்டு எப்போதாவது ஒரு முறை தான் வீட்டிற்கு வருவார் அதனால் அதை கண்டு கொள்ளவில்லை என்று காவல் துறையினரிடம் தெரிவித்துள்ளார்.
பின்னர் முத்துமாரியின் நடவடிக்கைகளை காவல்துறையினர் மறைமுகமாக கவனித்தபோது அவர் கள்ளக்காதலில் ஈடுபட்டிருந்தது தெரிய வந்துள்ளது. இது குறித்து காவல்துறையினர் முத்துமாரியிடம் மீண்டும் நடத்திய விசாரணையில் முத்துமாரிக்கும் அதே பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. செல்வராஜ் அதே பகுதியில் செங்கல் களைவாசல் வைத்து நடத்தி வருகிறார். அங்கு வேலை பார்த்த முத்துமாரி அவருடன் நெருங்கிப் பழகி வந்துள்ளார். இவர்கள் இருவரும் நெருக்கமாக இருந்ததை கண்ட நாகராஜ் முத்துமாரியை கண்டித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த முத்துமாரி செல்வராஜிடம் அதனை கூறியுள்ளார். பின்னர் நாகராஜ்க்கு செல்வராஜ் குடிப்பதற்காக அளவுக்கு அதிகமாக மதுபானம் ஊற்றி கொடுத்துள்ளார். அவர் அளவுகடந்த போதையில் இருக்கும் போது இருவரும் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். பின்னர் நாகராஜன் உடல் முழுவதும் பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் முத்துமாரியை கைது செய்து உத்தமபாளையத்தில் உள்ள கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள செல்வராஜை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.