16 வயது சிறுமிக்கு நடக்க இருந்த திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் 16 வயது சிறுமிக்கும், செஞ்சியை அடுத்த ஒரு கிராமத்தில் வசிக்கும் ஒரு வாலிபருக்கும் மேலச்சேரி கிராமத்தில் திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த குழந்தைகள் நல அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் லட்சுமிபதி, சமூக நலத்துறை விரிவாக்க அலுவலர் சாந்தி, செஞ்சி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி மற்றும் சப் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் போன்றோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுமியின் பெற்றோரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
அப்போது 18 வயது பூர்த்தியடையாத சிறுமிக்கு திருமணம் செய்வது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம் என அதிகாரிகள் அந்த சிறுமியின் பெற்றோரிடம் எடுத்துக் கூறி திருமணத்தை நிறுத்துமாறு சொல்லியிருகின்றனர். இதனையடுத்து அச்சத்தில் அந்த சிறுமியின் பெற்றோரும் திருமணத்தை நிறுத்தி விட்டனர். அதன் பின்னர் விழுப்புரம் சமூகநலத்துறை அதிகாரிகள் மூலம் குழந்தைகள் நல குழுவிடம் அந்த சிறுமி ஒப்படைக்கப்பட்டுள்ளார்.