நாட்டிலுள்ள 226 மாவட்டங்களில் தண்ணீர் பிரச்னையை சரி செய்வதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற மாநிலங்களவையில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு பிரதமர் மோடி பதிலளித்து பேசினார். அப்போது பேசிய அவர், தாங்கள் வெற்றி பெறாவிட்டால் , இந்தியா தோல்வி அடைகிறது என காங்கிரஸ் நினைக்கிறது. காங்கிரஸ் கட்சியும் இந்தியாவும் ஒன்றா ?. பாஜக வெற்றியடைந்ததால் ஜனநாயகம் தோற்றுவிட்டதாக காங்கிரஸ் கட்சி கூறுகிறது அப்படியெனில் வயநாடு, ரேபரேலியில் ஜனநாயகம் தோற்றுவிட்டதா என்ன?
நாங்களும் தோல்வி அடைந்திருக்கிறோம். ஆனால் வாக்குப் பதிவு இயந்திரத்தை குறை கூறியதில்லை. காங்கிரஸ் குறை கூறுவதை பார்க்கும் போது அவர்கள் மீது அவர்களுக்கு நம்பிக்கை இல்லை என தெரிகிறது. மோடி பெற்ற வெற்றி , நாடு அடைந்த தோல்வி என காங்கிரஸ் கூறுவது ஜனநாயகத்தை அவமானப்படுத்துவதாகும். காங்கிரஸ் கட்சி தொடர்ந்து இந்திய வாக்காளர்களை அவமதித்து வருகிறது. தனி மனிதர்கள் மீதான கும்பல் தாக்குதல் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படும். தனி மனிதர்கள் மீதான கும்பல் தாக்குதலை ஒருபோதும் ஏற்கவும் முடியாது, நியாயப்படுத்தவும் முடியாது.
நாட்டில் 226 மாவட்டங்களில் தண்ணீர் பிரச்னை நிலவுகிறது. எம்.பி.க்களின் நிதி மூலம் தண்ணீர் பிரச்னையை எப்படி தீர்க்கலாம் என முயற்சி செய்து வருகிறேன். தண்ணீர் பிரச்னை தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. பீகார் மூளைக்காய்ச்சல் விவகாரம் துரதிர்ஷ்டவசமானது. மூளைக்காய்ச்சல் நிலவரம் பற்றி பீகார் அரசிடம் அவ்வப்போது கேட்டறிந்து வருகிறேன் மூளைக்காய்ச்சல் பாதிப்பு சரிசெய்யப்பட்டு விரைவில் அதிலிருந்து வெளியே வருவோம் என நம்புகிறேன்