மனைவிக்கு அண்ணன் கேக் வாங்கி கொடுத்ததால் சந்தேகத்தில் தம்பி அண்ணனைக் கொலை செய்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள குமாரசேரி கிராமத்தில் யோவான் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஏசான் என்ற சகோதரன் இருக்கின்றார். இவர்கள் இருவரும் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளனர். இவர்களில் ஏசான் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும், மதுப்பழக்கம் மற்றும் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையானவர் என்றும் அவரது குடும்பத்தார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சகோதரர்கள் இருவரும் வீட்டில் இருந்தபோது, திடீரென ஏசான் தான் வைத்திருந்த கத்தியால் யோவானின் தலை மற்றும் கழுத்துப் பகுதியில் வெட்டியுள்ளார். இதனால் பலத்த காயமடைந்த யோவான் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த மப்பேடு போலீசார் ஏசானை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வந்தனர்.
அந்த விசாரணையில் ஏசான், தான் அனுஷா என்ற பெண்ணை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து நெல்லூரில் வசித்து வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அதன் பின் தனது சகோதரர் யோவான் பெயிண்டிங் வேலை செய்து வந்ததால் கடந்த மார்ச் மாதம் அவருடன் தான் வந்து தங்கியுள்ளதாக கூறியுள்ளார். இந்நிலையில் தனது மனைவியின் பிறந்தநாளை ஒட்டி ஊருக்கு சென்று யோவான் தனது மனைவிக்கு பிறந்தநாள் கேக் வாங்கி கொடுத்து கொண்டாடியதால் அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது என கூறியுள்ளார். இதனையடுத்து தனது அண்ணன் தனது மனைவியுடன் தொடர்பில் இருப்பதாக கருதி கொண்டு, அவரை கொலை செய்து விட்டேன் என அவர் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.