அச்சரப்பாக்கம் அருகே மாடு குறுக்கே வந்ததால் அரசு பேருந்து ஒன்று நிலைதடுமாறி பள்ளத்தில் கவிழ்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தமிழ்நாடு அரசு பேருந்து ஒன்று நேற்று காலை சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்தப் பேருந்து செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அடுத்த கடமை புத்தூர் அருகே சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக சாலையின் குறுக்கே மாடு ஒன்று வந்துள்ளது. அதனால் நிலைதடுமாறிய பேருந்து ஓட்டுநர், அந்த மாடு மீது மோதாமல் இருக்க பேருந்தை வேறு பக்கம் திருப்ப முயற்சி செய்துள்ளார்.
ஆனால் எதிர்பாராதவிதமாக பேருந்து நிலைதடுமாறி அங்கிருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அந்தக் கொடூர விபத்து சாலை வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் சிலர் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக ஓடி வந்து பேருந்தில் இருந்தவர்களை பத்திரமாக மீட்டனர். அந்தப் பேருந்தில் பயணம் செய்த 7 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் பற்றி உடனடியாக பொலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், காயமடைந்த பயணிகள் 7 பேரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதனைத் தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த கோர சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.