கொரோனா தாக்கம் குறைந்து வருவதால் வீட்டிலிருந்து பணிபுரிந்து வரும் ஊழியர்கள் அலுவலகத்திற்கு சென்று பணியாற்றவுள்ளார்கள்.
கொரோனா பரவல் காரணமாக கடந்த ஒரு வருடங்களாக அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் வீட்டிலேயே பணிபுரிந்து வருகிறார்கள. Work from home என்று கூறப்பட்டு வரும் இந்த நிலையானது உலகம் முழுவதும் பின்பற்றப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது கொரோனா படிப்படியாக குறைந்து வருவதால் ஒரு சில மாநிலங்களில் மீண்டும் பணியாளர்கள் அலுவலகங்களில் பணிபுரிய உள்ளார்கள். இதனால் பணியாளர்கள் அலுவலகத்திற்குச் சென்று பணிபுரிவதற்கான மனநிலையில் இருக்கிறார்களா? என்பதை அறிய கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.
மேலும் இந்த கணக்கெடுப்பானது கடந்த 2020 ஆம் வருடம் டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி முதல் 2021 ஆம் வருடம் ஜனவரி மாதம் 3 ஆம் தேதி வரை 1015 நகரங்களில் வசிக்கும் பணிபுரியும் ஊழியர்களிடம் நடத்தப்பட்டுள்ளது. இதில் பத்தில் ஏழு பேர் அலுவலகத்திற்கு சென்று பணிபுரிவது தான் நிம்மதி என்று தெரிவித்துள்ளனர். மேலும் கொரோனா ஊரடங்கு காலங்களில் அமைதியான சூழ்நிலை நிலவினாலும் பல சிக்கல்களும் ஏற்பட்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அதாவது அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஒவ்வொரு நாளும் மடிக்கணினி முன்பு அமர்ந்து பணிபுரிவதால் முதுகு வலி உட்பட பல பிரச்சனைகள் உண்டாகிறது என்று எலும்பியல் மற்றும் முதுகெலும்பு அறுவை சிகிச்சை ஆலோசகரான டாக்டர் சமீர் சால்வி கூறியுள்ளார். இதுமட்டுமன்றி வீட்டில் இருந்தபடி பணியாற்றிவரும் ஊழியர்களில் ஐந்தில் இருவருக்கு மன அழுத்தம் மற்றும் பதற்றம் அதிகரிப்பதாக ஆய்வு கூறுகிறது. மேலும் இந்திய பணியாளர்களில் சுமார் 40 சதவீதம் பேர் உறுதி இல்லாத ஊதியம் பெரும் நிலையில் இருப்பதால் அதிக நிதி நெருக்கடிக்கு ஆளாகிறார்கள் என்றும் தெரியவந்துள்ளது.
மேலும் மற்றொரு ஆய்வில் மக்கள் முன்பிருந்த நிலையைவிட அதிகமான எரிச்சல் உணர்வை சந்தித்துள்ளார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இதற்கு முன்பு அலுவலகத்திற்குச் சென்று வேலை பார்த்து வருவதால் வீட்டிலுள்ள அன்றாடப் பணிகளை சரியாக கவனித்து வர முடிந்துள்ளது. ஆனால் தற்போது வீட்டில் இருந்து பணிபுரியும் நிலை ஏற்பட்டதால் வீட்டு வேலைகளையும் அலுவலக வேலைகளையும் ஒரு சேர கவனிப்பதில் சிரமம் ஏற்படுகிறது.
மேலும் குழந்தைகளும் இடையில் குறுக்கிடுவதால் அதிக மன அழுத்தத்தை ஊழியர்கள் சந்தித்து வருகிறார்கள். மேலும் அலுவலகத்தில் பணிபுரியும் பெண்களுக்கு ஆண்களை விட அதிக மன அழுத்தம் மற்றும் பதற்றத்திற்கு உள்ளாகிறார்கள் என்று புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் பணிபுரியும் தாய்மார்களில் ஐந்தில் இரண்டு பேர் குழந்தையை பராமரிப்பதற்காக அலுவலக நேரங்களையும் தாண்டி நீண்ட நேரம் பணிபுரியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். எனவே இவர்களுக்கு மிகுந்த மன அழுத்தம் உண்டாகிறதாம்.