வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் அதிகளவு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருவதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். அங்குள்ள சுற்றுலாத்தளங்களில் நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் சுற்றுலா பயணிகளின் வருகையானது அதிக அளவில் காணப்படும். இந்த மாதங்களில் சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் வருகையும் அதிகளவு காணப்படும். இந்த மூன்று மாதமும் கன்னியாகுமரி சுற்றுலா தளங்களின் மெயின் சீசனாக உள்ளது. இதனை தொடர்ந்து கோடை விடுமுறை மாதமான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் கொரோனா ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டதால் விடுமுறை தினத்தில் கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிக அளவில் காணப்படுகிறது. அங்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் காலையில் சூரிய உதயத்தை கண்டு களித்தும், கடற்கரையில் மணலில் விளையாடியும் மகிழ்கின்றனர். மேலும் சுற்றுலா பயணிகளின் கூட்டமானது கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலி துறை கடற்கரையில் அதிக அளவில் காணப்படுகிறது. இதனால் கன்னியாகுமரியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால், போலீசார் போக்குவரத்தை சரி செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.