சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்ய முயன்ற போது அவரது மனைவி தன் உடலில் மண்ணெண்ணையை ஊற்றி கொண்டு தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பெசன்ட் நகர் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் ரத்தினம்-உஷா. ரத்தினம் பெசன்ட் பகுதியில் ரவுடியாக உள்ளவர். இவர் மீது ஏற்கனவே 20க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஓடை மாநகர் பகுதியில் இரவு நேரத்தில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்ற போது உஷா, ரத்தினம் மற்றும் அவர்களின் மகன் கார்த்திக் ஆகிய மூவரும் அங்கு அமர்ந்திருந்தனர்.
அப்போது அங்கு இருந்தவர்களுக்கு உஷா டம்ளரில் மதுபானம் ஊற்றி கொடுப்பதை காவல்துறையினர் பார்த்துள்ளனர். கையும் களவுமாக மாட்டி கொண்ட மூவரையும் காவல்துறையினர் கைது செய்ய முயன்றபோது அவர்கள் தப்பித்து ஓட முயற்சி செய்துள்ளனர். வீட்டிற்குள் சென்ற ரத்தினத்தை காவல் துறையினர் முதலில் கைது செய்ய முயன்றபோது உஷா தனது ஆடைகளை கழற்றி வீசியுள்ளார். காவல்துறையினரிடம் சிக்கிக் கொள்ளும் போதெல்லாம் இந்த வேலையை செய்வதையே உஷா வழக்கமாக கொண்டுள்ளார். இந்த முறையும் அப்படியே செய்ததால் காவல்துறையினர் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றனர்.
சற்றும் எதிர்பாராத விதமாக உஷா வீட்டில் இருந்த மண்ணெண்ணையை எடுத்து தன் உடம்பில் ஊற்றிக் கொண்டு தீப்பெட்டியையும் கையில் வைத்து கொண்டு தற்கொலை செய்யப்போவதாக காவல்துறையினரை மிரட்டியுள்ளார். அப்போது அவரது உடம்பில் எதிர்பாராதவிதமாக தீப்பற்றி கொண்டது. உடனடியாக காவல்துறையினர் உஷா மீது பற்றி எரிந்த தீயை அணைத்து அவரை காப்பாற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தற்போது உஷாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை நடைபெற்று வருகிறது. மேலும் அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதற்கிடையே தலைமறைவான ரத்தினத்தை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.