கால் மிதியடி தயாரிப்பு நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள குமிளம்பரப்பு பகுதியில் பிரகாஷ் என்பவர் வசித்துவருகிறார். இவர் கால் மிதியடி தயாரிக்கும் நிறுவனம் மற்றும் பழைய துணிகளை மறுசுழற்சி செய்து பஞ்சாக மாற்றும் நிறுவனம் ஆகியவற்றை சித்தோடு பச்சபாலி வசுவபட்டி என்ற கிராமத்தில் வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் அதிகாலை 4 மணி அளவில் இந்த கம்பெனி திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்து விட்டது. இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் பவானி தீயணைப்பு நிலையத்திற்கு தீ விபத்து குறித்து உடனடியாக தகவல் தெரிவித்து விட்டனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதன் பின் தீயணைப்பு வீரர்கள் சுமார் இரண்டு மணி நேரப் போராட்டத்திற்குப் பின்பு தீயை அணைத்து விட்டனர். இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகிவிட்டது. இச்சம்பவம் குறித்த முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த சித்தோடு போலீசார் விபத்து குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.