வீடியோ கேம் விளையாட விடாமல் தடுத்ததால் பிளஸ் 1 மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உழவர் தெருவில் பத்மினி என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு மாதவன் என்ற ஒரு மகன் உள்ளார். இவர் அங்குள்ள ஒரு பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர் தேவநேசன் நகர் 2வது தெரு இருளர் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு கடந்த வாரம் சென்றுள்ளார். இந்நிலையில் மாதவன் திடீரென தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி உடனடியாக பீர்க்கன்காரணை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மாணவரின் உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மாதவனின் தற்கொலை குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். அந்த விசாரணையில் மாதவன் எப்போதும் செல்போனில் வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்ததால், கோபத்தில் அவரது பெற்றோர் மாதவனை உறவினர் வீட்டிற்கு அனுப்பியது தெரியவந்துள்ளது. அதன் பின் மாதவன் வீடியோ கேம் விளையாடுவதை அவரது உறவினர்களும் தடுத்ததால் மனமுடைந்த மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.