சென்னை ரயில் நிலையத்தில் இளம்பெண்ணை அரிவாளால் வெட்டி விட்டு, ரயிலில் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சென்னை சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் இரண்டாவது பிளாட் பாரத்தில் கடந்த 14-ம் தேதி இரவு 8 மணி அளவில் ஈரோட்டைச் சேர்ந்த சுரேந்தர் என்ற இளைஞரும், அதே ஊரை சேர்ந்த கூட்டுறவுத்துறை ஊழியரான தேன் மொழி என்ற இளம்பெண்ணும் பேசிக்கொண்டு சென்று கொண்டிருந்தனர்.
திடீரென இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அந்த இளைஞன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அப்பெண்ணை வெட்டினான். இதில் தேன்மொழியின் கை விரல் மற்றும் தாடை பகுதியில் காயம் பட்டு ரத்த வெள்ளத்தில் அலறியபடி கீழே விழுந்தார்.
அதன் பிறகு சுரேந்தர் தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி சென்ற மின்சார ரயிலில் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றார். இதில் ரயிலில் அடிபட்டு அவருக்கும் காயம் ஏற்பட்டது. இதில் அரிவாளால் காயமடைந்த தேன்மொழி கீழ்பாக்கம் மருத்துவமனையிலும், ரயிலில் பாய்ந்த சுரேந்தர் ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுரேந்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.