கண்மாயில் குளிக்கச் சென்ற பெண் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குருமலை சந்தனமாரியம்மன் கோவில் தெருவில் திருமூர்த்தி என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு சுப்புலட்சுமி என்ற மனைவி உள்ளார். இவர் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டிருந்த காரணத்தால் திருமணமான சில மாதங்களிலேயே திருமூர்த்தி இவரை விட்டு பிரிந்து சென்று விட்டார். இதனால் தனது அண்ணன் அய்யனார் என்பவரின் மனைவியான செல்லத்தாயுடன் சுப்புலட்சுமி வசித்து வந்துள்ளார். இவர் குருமலையிலுள்ள ராஜாங்கல் கண்மாயில் குளிக்க செல்வது வழக்கம்.
இந்நிலையில் மாலை வேளையில் வீட்டை விட்டு வெளியே சென்ற சுப்புலட்சுமி, இரவாகியும் வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த செல்லத்தாய் கண்மாயில் சென்று பார்த்துள்ளார். அப்போது சுப்புலட்சுமியின் சேலையானது அங்குள்ள படிக்கட்டின் மீது கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த செல்லத்தாய் கொப்பம்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன் பின் போலீசார் கோவில்பட்டி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்து விட்டனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் இரவு முழுவதும் சுப்புலட்சுமியை கண்மாயில் தேடியுள்ளனர்.
இந்நிலையில் காலை 7 மணி அளவில் சுப்புலட்சுமியின் உடலானது கண்மாயில் மிதந்ததை பார்த்த கிராம மக்கள் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் இணைந்து சுப்புலட்சுமியின் உடலை வெளியில் கொண்டு வந்துள்ளனர். இதனையடுத்து போலீசார் சுப்புலட்சுமியின் உடலை கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர் மேலும் போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்