கடன் தொல்லையால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள லாடவரம் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. இவருடைய மகன் ராஜீவ் காந்தி என்பவர் தனியார் சர்க்கரை ஆலையில் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக சர்க்கரை ஆலை மூடப்பட்டு உள்ளதால் அவர் வீட்டிலேயே இருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ராஜீவ் காந்தி குடும்பத்தை நடத்துவதற்காக கந்துவட்டிக்கு பணம் வாங்கியுள்ளார். கடன் தொகை 5 லட்சத்திற்கும் மேல் உயர்ந்ததால் கடன் கொடுத்தவர்கள் ராஜீவ்காந்தியை கடனை திரும்பி செலுத்துமாறு தொல்லை கொடுத்துள்ளனர்.
இதனால் மனமுடைந்த ராஜீவ்காந்தி நேற்று முன்தினம் தன்னுடைய வீட்டில் விஷத்தை குடித்து மயக்கம் அடைந்துள்ளார். உடனே குடும்பத்தினர்கள் அவரை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காத காரணத்தினால் ராஜீவ்காந்தி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து கலசபாக்கம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.