பொதுமக்களுக்கு அரசியல் விழிப்புணர்வு போட்டிகள் நடத்தப்பட உள்ளதாக திருச்சி மக்கள் நீதி மையம் பொதுச்செயலாளர் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்கள் உள்ளன. இதனால் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். இந்நிலையில் “நான் எம்எல்ஏ ஆனால்” என்ற தலைப்பில் பொதுமக்களுக்கு அரசியல் விழிப்புணர்வு போட்டிகள் நடத்தப்பட உள்ளதாக திருச்சி மக்கள் நீதி மையம் பொதுச்செயலாளர் முருகானந்தம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “அரசியல் விழிப்புணர்வு மூலம் வருங்கால தலைமுறைகளால் வளமான தமிழகத்தை தரமுடியும்.
இதற்காக பொதுமக்களுக்கு பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட இருக்கின்றன. “நான் எம்எல்ஏ ஆனால்” என்ற தலைப்பில் பேச்சுப் போட்டியில், 3 நிமிடத்துக்கு குறையாமல், 5 நிமிடத்துக்கும் மிகாமல் அதை வீடியோவாக பதிவு செய்து கட்செவி க்கு அனுப்ப வேண்டும். அதோடு ஆதார் அட்டை அல்லது வாக்காளர் அட்டையை புகைப்படம் எடுத்து அனுப்ப வேண்டும். அதுபோல கட்டுரைப் போட்டியில் “சீரமைப்போம் தமிழகத்தை” என்ற தலைப்பில் நான்கு பக்கங்கள் குறையாமல் 6 பக்கங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
கட்டுரையை திருச்சி திருவெறும்பூரில் உள்ள மக்கள் நீதி மைய அலுவலகத்திற்கு தபாலிலோ அல்லது நேரிலோ ஆதார் அட்டை வாக்காளர் அடையாள அட்டை நகலுடன் அனுப்ப வேண்டும் என்று தெரிவித்துள்ளார். போட்டிகளில் பங்கேற்க பிப்ரவரி 14 கடைசி நாள். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு தலா 5 லட்சம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.