பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் கோவை நீதிமன்றத்தில் மேலும் ஒரு இளம்பெண் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். இதனால் பலர் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் இளம்பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகளை பலாத்காரம் செய்த வழக்கில் சபரிநாதன், சதீஷ், திருநாவுக்கரசு, வசந்தகுமார், மணிவண்ணன் ஆகிய 5 பேரை பாலியல் சட்டத்தின் கீழ் கைது செய்து சிபிஐ விசாரித்து வருகிறது. இது தொடர்பாக கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் கடந்த 5ஆம் தேதி அதிமுக முன்னாள் மாணவர் அணி செயலாளர் அருளானந்தம், பைக் பாபு, ஹெரோன் பால் ஆகிய 3 பேரையும் சிபிஐ போலீசார் கைது செய்தனர்.
பாதிக்கப்பட்ட மூன்று பெண்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மூன்று பேரும் கைது செய்தனர். இந்நிலையில் கடந்த 25ஆம் தேதி கோவை மகளிர் கூடுதல் கோர்ட்டில் பெண் நீதிபதி முன்பு ஒரு இளம் பெண் ரகசிய வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த பெண் தன்னை பாலியல் பலாத்காரம் செய்த மேலும் சிலரின் பெயர்களை நீதிபதியிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் பல முக்கிய நபர்கள் சிக்க வாய்ப்பு உள்ளதாக சிபிஐ தரப்பில் கூறப்படுகிறது. இந்த வழக்கில் ஒரு இளம்பெண் கோர்ட்டில் ரகசிய வாக்குமூலம் அளித்து மேலும் இந்த வழக்கிற்கு திருப்புமுனையாக அமைந்துள்ளது.