தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்ததற்காக மொத்தம் 177 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தேஷ்முக் சேகர் சஞ்சய்க்கு பல்வேறு இடங்களில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டே இருந்தது. இந்த புகாரின் பேரில் அவர் மாவட்டம் முழுவதும் சோதனை நடத்தும் படி போலீசாரிடம் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவின் பேரில் தஞ்சை கிழக்கு போலீசார் 5 இடங்களிலும், தெற்கு போலீசார் 7 இடங்களிலும், மருத்துவ கல்லூரி போலீசார் 4 இடங்களிலும், தமிழ் பல்கலைக்கழக போலீசார் 3 இடங்களிலும், தாலுகா இரண்டு இடங்களிலும், கள்ளபெரம்பூர் போலீசார் 4 இடங்களிலும் சோதனை நடத்தினர்.
இந்தச் சோதனையில் 29 கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து அந்தக் கடைகளின் உரிமையாளர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதேபோல் ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, கும்பகோணம், திருவிடைமருதூர், திருவையாறு போலீசார் 148 இடங்களில் சோதனை மேற்கொண்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் நடத்திய இந்த சோதனையில் மொத்தம் 177 பேர் மீது வழக்குப்பதிவு செய்துப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து சோதனை நடைபெறும் எனவும் போலீசார் எச்சரித்துள்ளனர்.