ஏடிஎம்-ஐ உடைத்து கொள்ளையடிக்க முயன்ற நபரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
வேலூர் மாவட்டம் விருப்பாச்சிபுரம் பகுதியில் உள்ள இந்தியன் வங்கியின் ஏடிஎம் மையத்தில் நள்ளிரவு 2 மணியளவில் மர்ம நபர் ஒருவர் உடைக்க முயன்று உள்ளார். அப்போது அங்கிருந்த எச்சரிக்கை அலாரம் ஒலி எழுப்பியதால் அவர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இதையடுத்து விருப்பாச்சிபுரம் இந்தியன் வங்கி மேலாளர் பிரதீபா, பாகாயம் காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஏடிஎம் மையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்துள்ளனர்.
அப்போது அதில் சுமார் 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பணத்தை கொள்ளை அடிக்க முயன்றது தெரியவந்துள்ளது. இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணையில் கொள்ளையடிக்க முயன்ற நபர் விருப்பாச்சிபுரம் இந்திரா நகர் பகுதியில் வசிக்கும் ஆனந்தன் என்பவரின் மகன் என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.