மஹாராஷ்டிரா கவர்னருக்கு நடிகை கங்கனா ரனாவத்தை சந்திக்க நேரமிருக்கிறது. ஆனால் போராடும் விவசாயிகளை சந்திக்க நேரமில்லை என்று அம்மாநிலத்தின் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கேள்வி எழுப்பியுள்ளார்.
டில்லியில் 2 மாதங்களுக்கு மேலாக வெயில், மழை, குளிரில் உறுதியுடன் போராடி வருகிறார்கள் விவசாயிகள். அவர்களுக்கு தார்மீக ஆதரவு தெரிவிக்கும் வகையில் மஹாராஷ்டிராவைச் சேர்ந்த 21 மாவட்ட விவசாயிகள் மும்பைக்கு பேரணியாக வந்துள்ளனர்.
அகில இந்திய விவசாயிகள் சபை என்ற பெயரில் பல ஆயிரம் பேர் ஆசாதி மைதானத்தில் கூடியுள்ளனர். இன்று அவர்களிடம் பேசிய தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், டில்லியில் போராடும் பஞ்சாப் விவசாயிகளை பயங்கரவாதிகள் என்கிறது பா.ஜ.க., பஞ்சாபியர்கள் நாட்டு விடுதலைக்காக போராடியவர்கள். வேளாண் சட்டங்களை நிறைவேற்றிய போது விவாதம் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை மோடி அரசு நிராகரித்துவிட்டது.
இன்று விவசாயிகள் சட்டத்தை ரத்து செய்யுங்கள், பிறகு பேச்சுவார்த்தை நடத்தலாம் என்கிறார்கள். இந்த அரசு விவசாயிகளை அழிக்க பார்க்கிறது. அத்தகைய அரசாங்கத்தை கவிழ்க்க முடியும் என்பதை உங்கள் பலத்தால் காட்டியுள்ளீர்கள். நீங்கள் அனைவரும் மஹா., ஆளுநரை சந்திக்க செல்கிறீர்கள். ஆனால் மகாராஷ்டிரா இதுபோன்ற ஆளுநரை இதற்கு முன் பார்த்ததில்லை. கங்கனா ரனாவுத்தை சந்திக்க அவருக்கு நேரம் இருக்கிறது, ஆனால் விவசாயிகளை சந்திக்க நேரமில்லை என்று விமர்சித்தார்