இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா என் பெயரை பயன்படுத்தி யாரேனும் பண மோசடியில் ஈடுபட்டால் அதற்கு நான் பொறுப்பாக மாட்டேன் என்று அறிவித்துள்ளார்.
YSR பிரைவேட் லிமிட்டெட் என்ற நிறுவனத்தின் மூலமாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தற்போது படங்கள் தயாரிப்பதில் ஈடுபட்டுவருகிறார். அவர் தயாரிப்பில் பியார் பிரேமா காதல் என்ற படம் வெளியானது. மேலும் தற்போது விஜய் சேதுபதி நடிக்கும் மாமனிதன் போன்ற படங்களையும் தயாரித்து வருகிறார். இந்நிலையில் தற்போது யுவன் தன் ட்விட்டர் பக்கத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, “என் நிறுவனமான YSR பிரைவேட் லிமிடேட் மற்றும் U! ரெக்கார்டஸ் சார்பாக அதிகாரபூர்வமாக அறிவிக்கிறேன்.
எனக்கு தெரியாமல் என் நிறுவனங்கள் மூலமாக ஏதேனும் ஒப்பந்தங்கள் செய்யப்பட்டால் அதற்கு நான் பொறுப்பில்லை. மேலும் பணம் மற்றும் ஒப்பந்தங்கள் செய்வதற்கு நான் யாருக்கும் அதிகாரம் கொடுக்கவில்லை. அவ்வாறு என் பெயரையோ மற்றும் நிறுவனத்தின் பெயரையோ பயன்படுத்தி பணப்பரிவர்த்தனையில் யாரேனும் ஈடுபட்டால் அல்லது ஒப்பந்தம் செய்தால் அதற்கு நான் பொறுப்பில்லை” என்று அறிவித்துள்ளார்.