மதுரையில் 7 வயது சிறுவன் டெங்குவிற்கு உயிரிழந்ததால் 1085 களப்பணியாளர்கள் டெங்கு தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மதுரை மாவட்டத்தைப் பொருத்த வரை டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 45 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று மதுரையை சேர்ந்த 7 வயது சிறுவன் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான். சிறுவனின் சகோதரர் தொடர்ந்து சிகிச்சையில் இருக்கிறார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் பயப்படுவதற்கு ஒன்றுமில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இந்நிலையில் டெங்கு தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் முழுவதும் 1085 களப்பணியாளர்கள் டெங்கு தடுப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பத்து பேர் கொண்ட குழுவாக அவர்கள் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு வீடுகளிலும் அவர்கள் ஆய்வு நடத்தி வருகின்றனர். குறிப்பாக ஒவ்வொரு வீடுகளிலும் தேக்கி வைத்துள்ள குடிநீர் போன்றவற்றை ஆய்வு செய்து அதில் மருந்து தெளிக்கும் பணியினை மேற்கொண்டு வருகிறார்கள்.
அதேபோன்று தேவையற்ற பொருட்களில் தேங்கியிருக்கும் தண்ணீரை அகற்றி அதன் மூலம் உருவாகும் கொசுக்களை ஒழிக்கும் பணியும் தொடர்ந்து நடைபெறுகிறது. மேலும் யாரேனும் காய்ச்சல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டு இருந்தால் அவர்கள் உடனடியாக அருகில் இருக்கும் அரசு மருத்துவமனையை அணுக வேண்டும். தாங்களாகவே மருந்து மாத்திரைகளை எடுப்பதை தவிர்க்க வேண்டும் என்ற அறிவுறுத்தல்களும் மாவட்ட சுகாதாரத் துறையினரால் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.