குடும்பத் தகராறில் கணவன்- மனைவி இருவரும் விஷம் குடித்ததில் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மணிமேடு பகுதியை சேர்ந்த தம்பதியினர் பூபதி தாஸ் – துர்கா. இத்தம்பதியருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் திருமணமான நாளிலிருந்து பூபதி தாஸுக்கும் துர்காவுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் நேற்று முன்தினம் இருவருக்குமிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றியதில் ஆத்திரமடைந்த பூபதி தாஸ் விஷத்தை குடித்து விட்டு தற்கொலை செய்து கொள்ளப் போவதாக துர்காவிடம் கூறியுள்ளார்.
அப்போது சற்றும் எதிர்பாராத விதமாக அந்த விஷத்தை வாங்கி துர்கா முதலில் குடித்துள்ளார். அதனை பார்த்த பூபதி தாஸும் விஷத்தை குடித்துள்ளார். இதனால் இருவரும் அங்கேயே மயங்கியுள்ளனர். இந்நிலையில் அங்கு வந்த பூபதி தாஸின் பெற்றோர் கணவன்-மனைவி இருவரும் மயங்கிக் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.பின்னர் உடனடியாக இருவரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அங்கு தம்பதியரை பரிசோதித்த மருத்துவர்கள் துர்கா இறந்து விட்டதாகவும் பூபதி தாஸின் நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும் கூறியுள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.