புதுச்சேரியின் அமைச்சர்கள் டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவளித்துள்ளனர்.
புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக ஆளுநர் கிரண்பேடி செயல்பட்டு வருகிறார் என்றும் அவரைப் பற்றி பிரதமர் மற்றும் குடியரசு தலைவரிடம் புகார் அளிக்கப் போவதாகவும் இதற்காக அமைச்சர்களுடன் டெல்லி செல்ல இருப்பதாகவும் முன்பே கூறியிருந்தார். இந்நிலையில் நேற்று முதலமைச்சர் நாராயணசாமி அமைச்சர்கள் கந்தசாமி, மல்லாடி கிருஷ்ணாராவ், கமலக்கண்ணன், ஷாஜகான் மற்றும் மக்களவை உறுப்பினரான வைத்தியலிங்கம் போன்றோர்களுடன் டெல்லிக்கு சென்றுள்ளார்.
விவசாயிகளுக்கான போராட்டம் டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்ற கந்தசாமி, கமலக்கண்ணன் போன்றோர் விவசாயிகளுக்கு ஆதரவு அளித்து அங்கேயே அமர்ந்து அவர்களுக்கான கோரிக்கைகளை வலியுறுத்த கோஷமிட்டுள்ளனர். இதனையடுத்து மின்துறையை தனியார் மயப்படுத்தக்கூடாது என்று வலியுறுத்து மத்திய மின்துறை அமைச்சரை நேரில் சந்திக்கவும் முடிவெடுத்துள்ளனர்.
சில நாட்களுக்கு முன்பு ஆளுநர் மாளிகைக்கு முன்பு அமைச்சர் கந்தசாமி ஆளுநர் கிரண்பேடி மக்கள் நல திட்ட ஆவணங்களில் கையெழுத்திடாமல் இருப்பதாகாவும் சமூகநலத்துறை அமைச்சரை சந்திப்பதற்கு நேரம் ஒதுக்குவதில்லை என்றும் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ள நிலையில் இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றது. அனைத்து அமைச்சர்களும் நேற்று டெல்லி பயணம் மேற்கொண்ட நிலையில் பொதுப்பணித் துறை அமைச்சரான நமச்சிவாயம் மட்டும் டெல்லிக்கு செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.