தேனி மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதால் அவருடன் பணியாற்றிய அலுவலர்களுக்கு பரிசோதனை செய்யப்படவுள்ளது.
தேனி மாவட்ட ஆட்சியரான மரியம் பல்லவி பல்தேவ் கடந்த 3 தினங்களாக காய்ச்சல், உடல் சோர்வு போன்ற பிரச்சனைகளால் ஆட்சியர் அலுவலகத்திற்கு வராமல் இருந்துள்ளார். இதனால் அவருக்கு நேற்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அவருக்கு இன்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகு அவர் உடனடியாக சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவிற்கான தனிமைப்படுத்தப்பட்ட பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். மேலும் மருத்துவமனைக்கு சென்றவுடன் ஆட்சியருக்கு சிடி ஸ்கேன் எடுக்கப்பட்டுள்ளது. அதன் பின்பே அவர் வார்டுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
மேலும் ஆட்சியர் அரசு மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சை பெறும்படி அவருக்கான உடைமைகளுடன் சென்றுள்ளார். மேலும் மருத்துவர்கள் அவருக்கு உருமாறிய புதிய கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதை பரிசோதிக்க முடிவெடுத்துள்ளனர். மேலும் மருத்துவர்கள் கூறியுள்ளதாவது, ஆட்சியருக்கு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒரு வாரம் சிகிச்சை அளிக்கப்படும் என்றனர். மேலும் சமீப காலமாக மாவட்ட ஆட்சியருடன் பணிபுரிந்து வந்த அரசு அலுவலர்கள் அனைவருமே கொரோனா பரிசோதனை செய்துகொள்ளுங்கள் என்று கேட்டுள்ளனர். மேலும் கடந்த ஜனவரி 15 மற்றும் 16 போன்ற தேதிகளில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ஆட்சியருடன் தேனி மாவட்டத்தில் நடைபெற்ற பல அரசு தொடர்புடைய நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.