தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிதி ஆயோக் கூட்டதில் கலந்து கொள்ள இன்று டெல்லி செல்கிறார்
மக்களவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதையடுத்து பிரதமர் மோடி மீண்டும் 2 வது முறையாக பதவியேற்ற பிறகு, நிதி ஆயோக் கூட்டம் நடைபெறுகிறது. பிரதமர் மோடி கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கேக்கில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் கலந்து கொண்டுள்ளார். அந்த பயணத்தை முடித்த பின் இந்தியா திரும்பிய பிறகு நாளை (சனிக்கிழமை) நிதி ஆயோக் கூட்டம் நடைபெறுகிறது.
இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிதி ஆயோக் கூட்டதில் கலந்து கொள்வதற்காக இன்று டெல்லி செல்கிறார். அவருடன் சில அமைச்சர்கள், அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் செல்வதாக கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் விவசாயத்தை மேம்படுத்துவது, விவசாயிகளின் நல்வாழ்வு, பொருளாதார வளர்ச்சி வேகம் பெறுவதற்கு நடவடிக்கைகள், வேலை வாய்ப்பினை பெருக்குவது போன்ற முக்கிய விவகாரங்கள் ஆலோசிக்கப்படுகிறது. இந்த கூட்டத்தின் போது பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை முதல்வர் பழனிச்சாமி சந்தித்து பேசுவார் என்று தெரிகிறது