டிஆர்பி ரேட்டிங்கில் மோசடி செய்ததால் கைதான பார்த்தோ தாஸ் குப்தா உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தொலைக்காட்சி சேனல்களின் பார்வையாளர்கள் எண்ணிக்கை கணக்கிடும் டிஆர்பி ரேட்டிங்கில், ரிபப்ளிக் தொலைக்காட்சி உள்பட 3 சேனல்கள் முறைகேடு செய்து இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளது. டிஆர்பி இல் ஏற்பட்ட முறைகேடால் ஊடகத்துறை மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளது. டிஆர்பியில் முறைகேடுகள் நடைபெறுவதாக டிஆர்பியை அளவிடும் ஹன்சா ஆராய்ச்சி நிறுவனத்தின் அலுவலரானநிதின் தியோகர் மும்பை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீசார் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இவ்வழக்கில் கடந்த மாதம் பார்க் அமைப்பின் முன்னாள் சிஇஓ பார்த்தோ தாஸ் குப்தா கைது செய்யப்பட்டார். அதன்பிறகு மும்பை மெட்ரோ பாலிட்டன் நீதிமன்றம் பார்த்தோ தாஸ் குப்தா தாக்கல் செய்த மனுவை கடந்த 4ஆம் தேதி தள்ளுபடி செய்தது. மும்பை காவல்துறையினர் டிஆர்பி ரேட்டிங் மோசடி குறித்து கூடுதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.
பார்த்தோ தாஸ் குப்தா, அர்னாப் கோஸ்வாமி பேசிய வாட்ஸ்அப் உரையாடல்களை அதில் சமர்ப்பித்திருந்தனர். இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் நேற்று திடீரென பார்த்தோ தாஸ் குப்தாவுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டதால் அவரை மும்பை ஜெஜெ மருத்துவமனையில் காவல்துறையினர் அனுமதித்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரின் உடலில் சர்க்கரை அளவு அதிகரித்ததால் தான் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.