தனியார் நிறுவனத்திற்குள் நுழைந்த காரணத்திற்காக நாயை கொடூரமாகத் தாக்கி கொன்றவர்கள் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாங்காடு பகுதியில் சத்யராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தினந்தோறும் அப்பகுதியில் உள்ள தெரு நாய்களுக்கு உணவு வழங்குவார். இந்நிலையில் சத்யராஜ் உணவு வைக்கும் போது அங்கு சாப்பிட வரும் ஒரு நாய் இல்லாததை கண்டுபிடித்தார். இதனையடுத்து அந்த நாயை அனைத்து இடங்களிலும் தேடி பார்த்த போது, அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் அந்த நாய் இருந்தது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து சத்யராஜ் அந்த நிறுவனத்திற்கு உள்ளே சென்று பார்த்தபோது அந்த நாய் முன் கால்கள் இரண்டும் உடைந்த நிலையில் பலமாக தாக்கப்பட்டு, முகத்தில் ரத்தம் வடிந்து படுத்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துவிட்டார். இதுகுறித்து அந்த நிறுவனத்தில் இருந்தவர்களிடம் அவர் கேட்டபோது ராஜேஷ், கீர்த்தி மற்றும் ரஞ்சித் ஆகியோர் இரும்பு கம்பியால் நிறுவனத்திற்குள் நாய் புகுந்த காரணத்திற்காக கொடூரமாக தாக்கியது தெரியவந்தது. அதோடு சத்யராஜை அவர்கள் அவதூறாக பேசியுள்ளனர்.
இதனையடுத்து அந்த நாயை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் அங்கு அதற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் அந்த நாய் இறந்து விட்டது. இது குறித்து காவல் நிலையத்தில் நாயை அடித்துக் கொன்ற குற்றத்திற்காக 3 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சத்யராஜ் புகார் அளித்துள்ளார். மேலும் புதைக்கப்பட்ட நாயின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்வதற்காக தாசில்தாருக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும் நாயை அடித்துக் கொண்டவர்கள் மீது பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.