இந்தியாவில் இருக்கக்கூடிய மிக பெரிய பிரச்சனைகளில் ஒன்று சாதிய பிரச்சனை. இந்த பிரச்சனையால் சக மனிதன் தனக்கு தேவையான அடிப்படை உரிமையை கூட பெறுவதில் பெரும் சிக்கல் என்பது நிலவி வருகிறது. குறிப்பாக திருமண வயதை அடைந்தவர்கள் தனக்குப் பிடித்த மணமகனையோ, மணமகளையோ தேர்வு செய்வதில் மிகப்பெரிய இடைஞ்சலாக இந்திய சமூகம் இருக்கிறது.
சமூகத்தை மீறி பிற சாதியினரோடு காதல் திருமணம் செய்து கொண்டால் ஊரை விட்டு ஒதுக்கி வைத்தல், குடும்பத்தில் இருந்து நீக்கி விடுதல், ஆணவக்கொலை உள்ளிட்ட பல்வேறு இன்னல்களை திருமணம் செய்து கொள்ளும் ஜோடிகள் சந்திக்கின்றனர். அந்தவகையில், திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள புல்லூர் பகுதியை சேர்ந்த கனகராஜ் ஜெயப்பிரியா ஆகியோர் காதல் திருமணம் செய்ததால் ஊர் பஞ்சாயத்து என்ற பெயரில் நடந்த கட்டப்பஞ்சாயத்தில் 2.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அபராதத்தை செலுத்தாததால் காதல் ஜோடியை ஊரை விட்டு துரத்திய அதிமுகவினர் உள்ளிட்ட பஞ்சாயத்தார் பெண்ணின் தந்தையை விரட்டி விரட்டி கடுமையாகத் தாக்கியுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.