ராஜபாளையத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவருடன் பெற்றோர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள குருவராஜா தெருவில் வாசிப்பவர் ஜனார்த்தன ராஜா. இவர் மஸ்கட், குவைத் போன்ற வெளிநாடுகளில் வேலை பார்த்து வந்துள்ளார். தற்போது கோவையில் குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இவருடைய மனைவி கலாவதி, மகன் சித்தார்த். இவர் கோவையில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். மகன் அங்குள்ள பள்ளியில் படிப்பதால் ஜனார்த்தனன் கோவையிலேயே மனைவி மகனுடன் தங்கியுள்ளார்.
நேற்று முன்தினம் இவர்கள் மூவரும் ராஜபாளையம் காமராஜ் நகர் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் அறை எடுத்து தங்கி உள்ளனர். இரவு சுமார் 11 மணியளவில் ஜனார்தனன் தன் நண்பனிடம் தான் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த காவல்துறையினர் கதவை திறந்து பார்த்தபோது ஜனார்த்தன ராஜா மற்றும் சித்தார்த் ஆகியோர் உயிருக்கு போராடிய நிலையில் இருந்தனர். கலாவதி ஏற்கனவே இறந்து கிடந்தார். உயிருக்கு போராடிய மகன் மற்றும் தந்தையை ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு இருவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதைதொடர்ந்து காவல்துறை விசாரித்ததில் மூவரும் அமோனியம் சல்பேட் என்ற விஷ மருந்தை உட்கொண்டது தெரிய வந்தது. இந்நிலையில் மூவரும் தற்கொலை செய்துகொண்டதன் காரணம் தெரியவில்லை. மேலும் விசாரணையில், அவர்கள் தற்கொலை செய்து கொண்ட அறையில் ஒரு கடிதம் சிக்கியது. அதில், “நாங்கள் கடவுளிடம் சொல்கிறோம், லேப்டாப், செல்போன், உடல் மற்றும் எங்கள் உடமைகளை உறவினர்களிடம் ஒப்படைத்து விடுங்கள். எங்கள் சாவுக்கு யாரும் காரணம் அல்ல” என குறிப்பிடப்பட்டிருந்தது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து உறவினர்களிடம் விசாரித்து வருகிறார்கள்.