அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் மாடு அவிழ்த்து விடுவது ஏற்பட்ட தகராறில் ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு போட்டி மதுரை அவனியாபுரத்தில் இன்று நடைபெறுகிறது. இன்று காலை 8 மணிக்கு உறுதிமொழி வாசிக்கப்பட்டு, அமைச்சர் செல்லூர் ராஜூ கொடியசைத்து போட்டியை துவக்கி வைத்துள்ளார். கோவில் காளை அவிழ்த்து விடப்பட்ட பிறகு மற்ற காளைகள் ஒவ்வொன்றாக இறக்கப்பட்டன. வாடிவாசல் வழியாக சீறிப்பாயும் காளைகளை மாடுபிடி வீரர்கள் பிடித்து காளையை அடக்க முயலும் காட்சிகள் காண்போரை மெய்சிலிர்க்க வைத்துள்ளன.
இந்த வருடம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சில கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு போட்டி நடந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில் ஜல்லிக்கட்டில் மாடுகள் அவிழ்த்து விடுவது பெரும் தகராறு ஏற்பட்டது. இந்த தகராறில் தேவேந்திரன் என்பவர் கத்தியால் குத்தப்பட்டு படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக கார்த்திகேயன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இதனால் ஜல்லிக்கட்டு களத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.