பிறந்து சில மணி நேரமே ஆன குழந்தையை நாய் வாயில் கவ்வி கொண்டு வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதியில் உள்ளது அருந்ததியர் காலனி. நேற்று 11:30 மணி அளவில் தெரு நாய் ஒன்று ஒரு பச்சிளம் ஆண் குழந்தையை வாயில் கவ்வியபடி வந்தது. அதன் பின்னால் மூன்று தெருநாய்கள் ஓடிவந்தன. இதை கண்ட அக்கம் பக்கத்தினர் குழந்தையை மீட்க நாய்களை விரட்டினர். இருப்பினும் நாய்கள் விடுவதாக இல்லை. தொடர்ந்து கற்களை எறிந்து நாய்களை விரட்டினர் அப்பகுதி மக்கள். உடனே அங்குள்ள முட்புதரில் குழந்தையை போட்டுவிட்டு நாய்கள் ஓடின.
இதையடுத்து அருகே சென்று பார்த்தபோது பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் குழந்தை தொப்புள் கொடியுடன் இறந்த நிலையில் கிடந்தது. மேலும் குழந்தையின் இடதுகையை நாய்கள் கடித்து குதறிய அடையாளம் இருந்தது. இதை பார்த்து வேதனையடைந்த மக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து விரைந்து வந்த காவல்துறையினர் குழந்தையின் உடலை கைப்பற்றி திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து திட்டகுடி காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்துகின்றனர்.