பொங்கலுக்கு மறுநாள் அதிகாலையில் பெண்கள் அனுஷ்டிக்கும் முறை கனு. இதில் பொங்கலில் செய்யப்பட்ட பொங்கல் மற்றும் கரும்பு துண்டுகள், வாழைப்பழம் ஆகியவற்றால் காகங்களுக்கு படையல் வைத்து, தன் சகோதரர்களின் வாழ்வு மேன்மை பெற வேண்டும் என்று பெண்கள் பிராதிப்பர். அதன்பிறகு ஸ்நானம் செய்துவிட்டு சூரியனுக்கு மீண்டும் பொங்கல் சமைத்து நிவேதனம் செய்யப்படும். அதன்பிறகு அனுஷ்டிக்கும் முறை கோ பூஜை எனும் மாட்டுப்பொங்கல்.
தேவாசுரர்கள் அமிர்தம் வேண்டி பாற்கடலைக் கடைந்த பொழுது அதில் இருந்து தோன்றியவர் தான் காமதேனு. அவளுடைய சந்ததி வாழும் லோகமே பூலோகம்.அங்குதான் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா ராதை மற்றும் கோபியர்களுடன் ஆனந்தமாக வாழ்கிறார் என்று புராணங்கள் கூறுகிறது. காமதேனுவின் சந்ததிகள் தான் பசுக்கள் ஆகும்.பசுக்களின் பாலினாலும், நெய்யினாலும் யாகங்கள் செய்யப்படுகின்றன. இப்பொழுதும் அப்படிப்பட்ட யாகங்கள் செய்யப்படுவதால் தான் மழை பொழிகிறது என்று புராணங்கள் சொல்கிறது.
பசுவின் பால், தயிர், மோர், நெய் ஆகியவை நமக்கு பல வழிகளிலும் பயன்படுகின்றன.அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை என்பது ஆன்றோர் வாக்கு. ஒரு தாயை போல் நமக்கு தேவையானவற்றை அளிப்பதால் தான் அவளை கோமாதா என்று அனைவரும் கொண்டாடுகின்றனர்.அப்பேர்ப்பட்ட பசுவை பூஜித்து அவளுக்கு நெய்வேத்தியம் படைத்து தன் நன்றியை செலுத்தும் பூஜையே கோ பூஜை ஆகும்.
தன் வீட்டிலுள்ள பசுவிற்கோ அல்லது அருகில் உள்ள பசு மடம் சென்று பிரத்யட்சமாக பசுவிற்கு பூஜை செய்வது உத்தமபக்க்ஷம் ஆகும். இது முடியாதவர்கள் கும்பத்திலோ அல்லது பசுவின் விக்ரகத்திற்கோ பூஜை செய்யலாம். பசுவிற்கு பொங்கல்,வாழைப்பழம் ஆகியவற்றை நிவேதனம் செய்து புஷ்பங்களால் லட்சுமி அஷ்டோத்திரம் கூறி அர்ச்சித்து அதன் வால் பக்கமாக வந்து நமஸ்காரம் செய்யவேண்டும்.