தமிழகத்தில் திரையரங்குகளில் அதிக கட்டணம் வசூல் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்த நிலையில், கடந்த மாதம் 50 சதவீத இருக்கையுடன் திரையரங்குகளை திறப்பதற்கு தமிழக அரசு அனுமதி அளித்தது. அதன் பிறகு பல நடிகர்கள் 100 சதவித இருக்கைக்கு தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்ததால், தமிழக அரசு அனுமதி வழங்கியது.
இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தமிழக அரசை மீண்டும் 50% இருக்கைக்கு மட்டுமே அனுமதி அளித்துள்ளது. ஆனால் திரையரங்குகளில் கூடுதல் காட்சிகள் திரையிடப்படுவதற்கு அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் மாஸ்டர் மற்றும் ஈஸ்வரன் திரைப்படங்கள் பொங்கலுக்கு வெளியாக இருப்பதால், பல திரையரங்குகளில் அதிக கட்டணம் வசூல் செய்யப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதனையடுத்து திரையரங்குகளில் அதிக கட்டணம் வசூல் செய்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.