சாலையோரங்களில் பூத்துக்குலுங்கும் பொங்கல் பூவை பொதுமக்கள் பலர் எடுத்துச்சென்று மகிழ்கின்றனர்.
பொங்கல் திருநாள் ஒரு மங்கலமான நாள் ஆகும். பொங்கல் பண்டிகைக்காக வீட்டில் கோலமிட்டு சூரிய பகவானுக்கு வாழைப்பழம், கரும்பு, இலை, மஞ்சள் குலை, வெற்றிலை-பாக்கு புதுப்பானையில் பச்சரிசி பொங்கல், பனங்கிழங்கு, பல வகையான காய்கறிகள், வாசனைப் பூக்கள் என இப்படி ஏராளமான மங்கலமான பொருட்கள் வைத்து பொங்கலின் போது வணங்குவார்கள். இதில் பொங்கல் பூவும் மிக முக்கியமானது.
பொங்கலுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் சாலை பகுதிகளிலும் காட்டுப் பகுதிகளிலும் பொங்கல் பூ பொங்கலை வரவேற்று பூத்து குலுங்குகிறது. இந்த பூவினை எடுத்து அதை மாவிளை உடன் சேர்த்து கடைவீதியில் சிறுசிறு கட்டுகளாகக் கட்டி ஒரு ரூபாய் முதல் 2 ரூபாய் வரை விற்பனை செய்வார்கள். இவற்றை போட்டிபோட்டு வாங்குவார்கள் பொதுமக்கள்.
தற்போது பொங்கல் பொருட்களுடன் இந்த பூவின் விற்பனை வெகு விமர்சையாக நடைபெறுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உடன்குடி, குலசேகரன்பட்டினம் என்னும் ஊரில் உள்ள மெயின் ரோடு ஓரங்களிலும் தாண்டவன்காடு ரோடு, முத்துகிருஷ்ணாபுரம், பரமன்குறிச்சி ஆகிய இடங்களில் எல்லாம் பொங்கல் பூ பூத்துக் குலுங்குகிறது. இவற்றை பலரும் பறித்துக் கொண்டு வீட்டின் முகப்பிலும் பூஜை அறைகளிலும் கொண்டு சென்று மாவிளை உடன் சேர்த்து கட்டி வைத்து மகிழ்கின்றனர்.