Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

“8 வழிச்சாலை திட்டம்” மத்திய அரசின் மேல் முறையீட்டு மனு இன்று விசாரணை….!!

8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக சென்னை உயர்நீதி மன்றம் விதித்த தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வருகின்றது.

மத்திய அரசு கொண்டு வந்த பாரத்மாலா என்ற திட்டத்தின் கீழ் சென்னை முதல் சேலம் வரை 276 கிலோ மீட்டர் தொலைவிற்கு சுமார் ரூ.10 ஆயிரம் கோடி செலவிவு செய்து 8 வழி சாலை அமைக்கும் திட்டம் முடிவு செய்யப்பட்டது.  இந்த திட்டத்தை செயல்படுத்த சேலம், தர்மபுரி, காஞ்சீபுரம், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் உள்ள சுமார் 1,900 ஹெக்டேர் அளவிற்க்கான நிலங்களை கையகப்படுத்த அரசு முடிவு செய்து அதற்கான அரசாணையை கடந்த 2018_ஆம் ஆண்டு மே மாதம் வெளியிட்டது.

மேலும் இதில் கையகப்படுத்தக் கூடிய  நிலங்களில் வனப்பகுதி மட்டும் சுமார் 120 ஹெக்டோ் நிலங்கள் என்றும் இதனால் அதிலுள்ள 10 ஆயிரம் பாசன கிணறுகள், 100 குளங்கள், பல லட்ச மரங்கள் அழிக்கப்படும் என்றும் , சேர்வராயன், கல்வராயன் உள்பட 8 மலைகள் இந்த திட்டத்திற்க்காக  உடைக்கப்படும் என்றும் கூறப்பட்டது. இதையடுத்து சம்மந்த பட்ட இடங்களில் அரசு அதிகாரிகள் அளவீட்டு கல்லை நட்டும் பணியில் ஈடுபட்டனர். இதற்க்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து மக்கள் , அரசியல் கட்சியினர் போராட்டங்களை முன்னெடுத்தனர்.

இந்நிலையில் இந்த திட்டத்தை செயல்படுத்தினால் சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும். எனவே  இந்த 8 வழி பசுமைச்சாலை திட்டத்தை ரத்து செய்யவேண்டுமென்று  சென்னை உயர்நீதிமன்றத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வக்கீல் ஏ.பி.சூரியபிரகாசம், விவசாயி பி.வி.கிருஷ்ணமூர்த்தி, பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் 8 வழிச்சாலை திட்டத்துக்காக நிலத்தை கையகப்படுத்த தமிழக அரசு பிறப்பித்த அறிவிப்பாணையை ரத்து செய்து  தீர்ப்பு அளித்தார். மேலும் பொதுமக்களிடம் கையகப்படுத்தப்பட்ட நிலம் 8 வாரத்துக்குள் திருப்பிக்கொடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை உயர்நீதிமன்றம் வித்தித தடை உத்தரவுக்கு எதிராக மத்திய அரசின் திட்ட செயல்பாட்டு பிரிவின் இயக்குனர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் ,சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினால் மக்களின் நலனுக்காக கொண்டு வரப்பட்ட  திட்டம் பாதிக்கப்பட்டுள்ளது. பொதுநலன் கருதி அரசாங்கம் கொண்டுவரும் திட்டங்களுக்கு தடை விதிப்பது அப்பகுதி மக்களின் நலனுக்கு எதிரானது எனவே சென்னை உயர்நீதிமன்ற  தீர்ப்பை ரத்து செய்து ‘பாரத்மாலா’ திட்டத்தின் கீழ் செயப்படுத்தவுள்ள சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டத்துக்கு அனுமதி அளிக்க வேண்டுமென்று கூறப்பட்டு இருந்தது. இந்த மனுவை இன்று உச்சநீதிமன்றம் விசாரிக்க உள்ளது.

Categories

Tech |