கடும் எதிர்ப்புக்கு பிறகு இந்தி மொழி பயிற்றுவிப்பது கட்டாயம் என்ற பரிந்துரை நீக்கப்பட்டு புதிய கல்வி வரைவு கொள்கை வெளியிடப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி தலைமையில் மத்திய அரசு இரண்டாவது முறை பொறுப்பேற்றது. இதையடுத்து மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை புதிய கல்வி வரைவு கொள்கையில் இந்தி பேசாத மாநிலங்களிலும் ஹிந்தியை பயிற்று விக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தது. இதற்கு தமிழகம் மட்டுமில்லாமல் இந்தி பேசாத பல மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. பல்வேறு அரசியல் தலைவர்களும் தங்களது எதிர்ப்பை காட்டினர். சமூக வலைத்தளங்களில் இந்தி எதிர்ப்பு ஹேஸ்டேக்குகள் பறந்தன.
இந்த நிலையில் இந்தி மொழி பேசாத மாநிலங்களில் இந்தியை பயிற்றுவிப்பது கட்டாயம் என்ற பரிந்துரை நீக்கபட்டு புதிய கல்வி வரைவு கொள்கை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் எழுந்த எதிர்ப்பையடுத்து இந்தி கட்டாயம் என்ற பரிந்துரை கல்விக் கொள்கை வரைவில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 3வது மொழியாக இந்தி பாடம் பயில வேண்டும் என்பது கட்டாயமில்லை. மாணவர்கள் விருப்பத்தின் படி 3-வது மொழியை அவர்களே தேர்வு செய்து படிக்கலாம் என்று திருத்தப்பட்ட வரைவில் கூறப்பட்டுள்ளது.