இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்கக் கோரி மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும் 2000-திற்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று முன்தினம் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அப்போது கடலுக்கு சென்ற மீனவர்களில் ஒரு தரப்பினர் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது, அந்த மீனவர்களை அங்கு வந்த இலங்கை கடற்படையினர் தாக்கி விரட்டியடித்தனர். அதோடு ராமேஸ்வரத்தை சேர்ந்த 9 மீனவர்கள் எல்லை தாண்டி வந்ததாக கூறி கடற்படையினர் கைது செய்ததோடு, இலங்கை காங்கேசன் துறைமுகத்துக்கு கொண்டு சென்று சிறையில் அடைத்தனர்.
இச்சம்பவம் ராமேஸ்வரம் மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ராமேஸ்வரத்தில் மீனவர் சங்க கூட்டம் நடைபெற்றது. அதன்படி இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தூத்துக்குடி, நாகப்பட்டினம், ராமேஸ்வரம், பாம்பன் மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்பதையும், பாரம்பரிய கடல் பகுதியில் இலங்கை கடற்படையின் இடையூறு இன்றி சுதந்திரமாக மீன்பிடிக்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தி இன்று முதல் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்தனர்.
எனவே 5௦௦௦-ற்கும் மேற்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் மற்றும் மீன்பிடி தொழில் செய்பவர்கள் இன்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் கடலில் 800க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளதால் ராமேஸ்வரம் துறைமுகம் வெறிச்சோடி காணப்படுகிறது. இதனையடுத்து இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்கும் வரை இந்தப் போராட்டமானது தொடரும் என மீனவர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த போராட்டத்தில் பங்கேற்காமல் சிறிய விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல திட்டமிட்டு மீன்பிடி டோக்கன் வழங்கும் அலுவலகத்திற்கு சென்று அனுமதி கேட்டனர். ஆனால் பெரிய விசைப்படகு மீனவர்கள் டோக்கன் வழங்கும் அலுவலகத்தை முற்றுகையிட்டு இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் மீனவ்ர்களுக்கிடையில் ஏற்பட்ட இந்த தகராறுகாரணமாக யாருக்கும் டோக்கன் வழங்கப்படவில்லை. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.